

இரண்டாம் கட்ட திட்டத்தில் 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் உணவகம், ஷாப்பிங், ஓய்வறை வசதி
பயணிகளின் வணிகப் பகுதியாக அமைகிறது
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரெயில் முதல்கட்ட திட்டம் போல இல்லாமல் இரண்டாவது கட்டத்தில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் வணிகப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவு போக்குவரத்து மையங்களாக மட்டுமல்லாமல் பயணிகள் உணவருந்தவும் ஷாப்பிங் செய்யவும் மற்றும் ஓய்வெடுக்கவும் பொது இடங்களாக அவை செயல்பட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாதவரம் முதல் சிப்காட் வரையிலான மூன்றாவது வழித்தடத்தில் சேத்துப்பட்டு, ராயப்பேட்டை ஸ்டெர்லிங் சாலை நுங்கம்பாக்கம் ஆர்.கே. சாலை மற்றும் அடையாறு பணிமனை ஆகிய 6 சுரங்க ரெயில் நிலையங்கள் மற்றும் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை பாரதிதாசன் சாலை, போட் கிளப், நந்தனம் ஆகிய 5 நிலையங்கள் என மொத்தம் 11 நிலையங்களில் ஷாப்பிங் பகுதி அமைகிறது. சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் உலோகங்களுக்கான சிறிய அளவிலான இடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கிய பிறகு இது போன்ற வணிகப் பகுதிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனால் 2-ம் கட்டத்தில் நிலைய கட்டுமான பணிகள் நடக்கும் போதே இதை மேற்கொள்ள மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.