தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள

த.வெ.க. அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும்.

ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும். இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல. மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.

மத்திய அரசு உறுதி அளித்துள்ளது

பிரதமர் தலைமையிலான மத்திய அரசு எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், த.வெ.க. அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல. கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்வர் விஜய் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. ஆனால், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவுக்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக எதிர்ப்பு தெரிவித்தனர்.

என்றபோதிலும் குரல் வாக்கெடுப்பால் இரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com