

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தன. அதன்படி மீனவர்கள் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மற்றும் அதில் இருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதே போல கடந்த 55 நாட்களில் மட்டும் 61 மீனவர்கள் மற்றும் 9 விசைப்படகுகளை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக மீனவ சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான விசைப் படகுகளை அந்நாட்டு அரசு உடைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதனை மத்திய, மாநில அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தன. அதன்படி மீனவர்கள் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
இதன் காரணமாக சுமார் 700 முதல் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10,000 முதல் 20,000 மீனவர்கள் வரை வேலை இழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1 கோடி வரை அந்நிய செலாவணி மற்றும் ரூ.3 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ராமேசுவரத்தில் இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 192 படகுகளை மீட்க வேண்டும். மீனவர் சங்கத்தினருடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மீனவர்கள் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வருகிற வியாழக்கிழமை மீனவர் சங்க பிரதிநிதிகள் சென்னை சென்று மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.