

ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் முகமது அர்ஷத் (வயது 19), முகமது பகத் (18) மற்றும் முகமது ஹசன் (19). நெருங்கிய நண்பர்களான இவர்கள் 3 பேரும் சென்னை, மதுரை ஆகிய ஊர்களில் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். தற்போது தொடர் விடுமுறை நாட்களையொட்டி, சொந்த ஊருக்கு வந்திருந்த அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் 3 பேரும், ராமநாதபுரத்தில் இருந்து நேற்று இரவு தேவிபட்டினம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அதிக வேகத்தில் சென்ற இருசக்கர வாகனம் புல்லங்குடி அருகே முன்னால் சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர்கள் மீது அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே முகம்மது ஹசன் பரிதாபமாக உயிரிழந்தார். முகமது ஹர்ஷத் மற்றும் முகமது பகத் ஆகிய இரண்டு பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
2 பேர் பலி
இதில் முகமது பகத் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர்கள் 3 பேரில் 2 பேர் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேவிப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முகமது அசனின் தாயார் தரையில் உள்ளது உருண்டு புரண்டு அழுது சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.