

தமிழகத்தில் ஒரு மேல் சபை எம்.பி. சீட் காலியாக உள்ளது. இதற்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்டது.
இந்த தேர்தலில் த.வெ.க. அறிவிக்கும் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி. எனவே த.வெ.க. யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் புதிதாக ஆட்சிக்கு வந்து உள்ள முதலமைச்சர் விஜய் முதலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கட்சி பிரதிநிதியை டெல்லி பாராளுமன்றத்தில் இடம்பெற செய்வார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆனால் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நிலையில் மேல்சபை உறுப்பினருக்கான இடம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்த எம்.பி. பதவியை காங்கிரசை சேர்ந்த தனது நண்பர் பிரவீண் சக்கர வர்த்திக்கு பரிசாக வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அமைய பிரவீண் சக்கரவர்த்தி கடுமையாக பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே முதலமைச்சர் விஜய்யின் விருப்பத்தினை காங்கிரஸ் மேலிடமும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
பிரவீண் சக்கரவர்த்தி இன்று வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் நாளை (வெள்ளிக்கிழமை) அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு என்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
பிரவீண் சக்கரவர்த்தி பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். அரசியல் மற்றும் பொருளாதார துறையில் வெளிநாட்டில் படித்த போது ராகுலின் நட்பு கிடைத்தது.
இந்தியா திரும்பிய பிரவீண் சக்கரவர்த்திக்கு காங்கிரசின் தரவுத் துறை தலைமை பொறுப்பை ராகுல் வழங்கினார். நாடு முழுவதும் மாவட்ட அளவில் அவர் திரட்டி கொடுத்த தரவுகள் தேர்தல் காலங்களில் காங்கிரசுக்கு கள நிலவரத்தை உணர்த்தியது.
அவரது கடினமான பணியினை கருத்தில் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு அவரை மேல்சபை உறுப்பினராக்க ராகுல் முடிவு செய்தார். ஆனால் அப்போது காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரத்துக்கு அந்த பதவியை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் மயிலாடுதுறை தொகுதி பிரவீண் சக்கரவர்த்திக்கு கேட்டு பெறப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அப்போதும் அரசியல் அழுத்தங்களால் அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கை நழுவியதாக காங்கிரசார் கூறுகிறார்கள்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக போராடினார். தமிழகம் முழுவதும் கள நிலவரம் மாறியிருக்கிறது என்பதை தரவுகளுடன் ராகுல் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதை தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசி வந்தார். அந்த பேச்சு வார்த்தையில் 70 தொகுதிகள் வரை ஒதுக்கவும் துணை முதலமைச்சர், 8 அமைச்சர்கள் வரை தருவதாகவும் த.வெ.க. தரப்பில் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
அதனால் தான் டெல்லி பிரதிநிதியாக வந்த கிரீஷ் சோடங்கரும் ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தினார். இருப்பினும் காங்கிரசுக்குள் தி.மு.க. கூட்டணியை விரும்பியவர்கள் கை பலமானதால் கடைசியில் தி.மு.க. கூட்டணி உருவானது.
இதை மனதில் கொண்டு தான் தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் விஜய், ராகுல்காந்தி மற்றும் பிரவீண் சக்கரவர்த்தி பெயரை குறிப்பிட்டு உண்மையான காங்கிரஸ் தங்கள் பக்கம் இருப்பதாக குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவில் த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டதால் உடனடியாக தி.மு.க. கூட்டணியை விட்டு விலகி 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுக்க செய்ததிலும் பிரவீண் சக்கரவர்த்தியின் பங்களிப்பு அதிகம் என்கிறார்கள். எனவே தான் பிரவீண் சக்கர வர்த்திக்கு எம்.பி. பதவி வழங்க முதலமைச்சர் விஜய்யும் விரும்பியதாக கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்சபைக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைக்கப் போகிறது. இதன் மூலம் டெல்லி மேல்சபையில் காங்கிரசின் பலம் 29 ஆக உயரும்.