

நெல்லை மாவட்டத்தில் காண்டிராக்டரிடம் நகை பறிப்பு மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டில் பெண் யூடியூபர் மதுமிதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் வழக்கு மேல்நடவடிக்கைக்காக நெல்லை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நெல்லை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பேச்சி முத்து (வயது 89), பில்டிங் காண்ட்ராக்டர். இவர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பில்டிங் காண்ட்ராக்டராக வேலை பார்த்து வருகிறேன். முதுகுவலி சிகிச்சைக்காக அடிக்கடி பிசியோதெரபி செய்யச் செல்வது வழக்கம். அப்போது, நாகர்கோவில் தம்பத்துகோணம் பகுதியை சேர்ந்த மதுமிதா என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் அடிக்கடி எனது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
அப்போது அவர் பாலுணர்வைத் தூண்டும் வகையில் இரட்டை அர்த்தங்களில் பேசி வந்தார். இதனால் நான் அவருடன் செல்போனில் பேசுவதை தவிர்த்து வந்தேன். இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு அவசரமாக பார்க்க வேண்டும் என்று என்னை நெல்லை கோர்ட்டு பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்திற்கு வருமாறு கூறினார்.
இதனை தொடர்ந்து நான் எனது நான்கு சக்கர வாகனத்தில் அங்கு சென்றேன். பின்னர் மதுமிதா எனது வாகனத்தில் ஏறினார். அதன் பிறகு எனக்கு பிசியோதெரபி செய்ய முயன்றார். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று கூறி விட்டேன். பின்னர் அவரை நெல்லை பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு எனது வீட்டிற்கு சென்று விட்டேன். அப்போது எனது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
இது பற்றி மதுமிதாவிடம் கேட்டபோது, “உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்” என்று மிரட்டி சென்று விட்டார். மேலும், இது தொடர்பாக புகார் செய்தால் தன்னை அவதூறாகப் பேசி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டினார். இதனால், அப்போது புகார் அளிக்காமல் இருந்து விட்டேன். தற்போது புகார் அளிக்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மதுமிதா மீது போலீசார் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேச்சிமுத்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தாலும், சம்பவம் நெல்லை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால், இந்த வழக்கை மேல் நடவடிக்கைக்காக நெல்லை மாவட்டத்திற்கு மாற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுமிதா தற்பொழுது பெண் யூடியூபராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பணம் மற்றும் நகைகளை வைத்து பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். மதுமிதாவின் யூடியூப் வீடியோவை பார்த்து கடந்த 2 வாரத்திற்கு முன்பு அவரது வீட்டில் 118 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் வருமான வரி துறையினரும் மதுமிதா குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகும் மதுமிதா தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.