நீட் ரத்து தீர்மானத்திற்கு பாமக முழு ஆதரவு!- சவுமியா அன்புமணி

கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பாமகவின் தொடர் கோரிக்கை
Sowmya Anbumani  Bhojarajan
Published on: 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் சவுமியா அன்புமணி முழு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார்.

நீட் தேர்வு முறையால் அதிக மதிப்பெண்கள் பெற்ற போதிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத அவலநிலை நீடிக்கிறது. தற்போதுள்ள சூழலில் வெறும் 15 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட ரூ.30 லட்சம் வரை பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நிலை உள்ளது. இது உண்மையான திறமைக்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டினார்.

மாநிலப் பட்டியலுக்கு மாற்றம்

கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பாமகவின் தொடர் கோரிக்கை என்று குறிப்பிட்ட அவர், மாநில அரசே மருத்துவச் சேர்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

தீர்மானத்திற்கு ஆதரவு

வணிகமயமாக்கப்பட்டு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நிறைவேற்றப்படும் இந்தத் தனித் தீர்மானத்தை பாமக முழு மனதுடன் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

நீட் பயிற்சி மையங்களை அரசே ஏற்று நடத்தலாமே- பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன்

முன்னதாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், மாநில அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நீட் தேர்வின் அவசியத்தையும், அதன் மூலம் கிடைக்கும் கல்வித் தரத்தையும் சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு முறையினால் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக, பல்லடத்தில் உள்ள ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

அரசே பயிற்சி மையங்களை நடத்த கோரிக்கை

தனியார் பயிற்சி மையங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழும் நிலையில், "நீட் பயிற்சி மையங்களை ஏன் அரசே நேரடியாக ஏற்று நடத்தக்கூடாது?" என்ற கேள்வியை முன்வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசே இலவசப் பயிற்சி அளிக்கும் போது அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com