

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடி கிடங்கில் கொட்டப்படுகிறது. தினமும் 6000 மெட்ரிக் டன் குப்பைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது.
பெருங்குடி குப்பை கிடங்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை உள்ளது. மேடவாக்கம் பெருங்குடி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து எறிந்தது. தீ ‘மளமள’ என தேங்கி கிடந்த குப்பை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ பரவாமல் அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
ஆனாலும் தீ அருகில் வாகனங்கள் நிறுத்தி இருந்த பகுதியிலும் பரவியது. மாநகராட்சி மூலம் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. அதில் 100 வாகனங்கள் தீயில் எரிந்துள்ளன.
தீயை கட்டுப்படுத்த குடிநீர் வாரியத்தின் லாரிகள் கொண்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து குப்பை கிடங்கில் பரவிய தீயை அணைக்க வீரர்கள் முயற்சி எடுத்தனர்.
குப்பை கிடங்கில் பரவிய தீ காடுகள் எரிந்து வரும் கரும் புகை போன்று காட்சியளித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. குப்பை கிடங்கு தீப்பற்றி எரிந்ததை அப்பகுதி மக்களும் வாகனத்தில் சென்றவர்களும் ஆச்சரியமாக பார்த்தனர்.
குப்பை கழிவுகள் எரிந்து கரும்புகையாக மாறி நச்சு வாயு பரவியது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டனர். பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.