

பழனி கோவில் நிலம் முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி அதிமுக சார்பில் 25ம் தேதி கண்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மடத்திற்குச் சொந்தமான நிலம் சம்பந்தமாக முந்தைய திமுக ஆட்சியிலிருந்தே பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரியவருகிறது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தூய சக்தி அரசு என்று சொல்லிக் கொள்பவர்களின் அறநிலையத் துறையின் பராமரிப்பில் இருந்த இந்த நிலம், தற்போது இரண்டு தனியாருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த பத்திரப் பதிவை செய்வதற்காகவே பழனி சார் பதிவாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டு, கொடைக்கானலில் இருக்கும் சார் பதிவாளரை ஒருநாள் கூத்தாக பழனி அலுவலகத்திற்கு நியமித்துள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.
அந்த அதிகாரி உயர்நீதிமன்ற வழக்கைப் பற்றியோ, நீதிபதிகளின் அறிவுறுத்தலையோ கருத்தில் கொள்ளாமல் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.
இந்த நில மோசடி விற்பனை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்ததும், அதிகார வர்க்கம் தங்களை களங்கத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள CBCID மூலம் ஒரு கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
விசாரணை செல்லும் கோணத்தைப் பார்த்தால், மோசடி செய்தவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும், தூண்டியவர்களையும் காப்பாற்றும் நோக்கோடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்த அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலத்தை ரூ. 2 கோடிக்கு வாங்கிய இருவர் இன்னும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்துக்களும் இதுபோல் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமை.
இந்தக் கடமையில் எங்களுக்கு உறுதுணையாக அனைத்துத் தரப்பு மக்களும், ஆன்மீகவாதிகளும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது.
எனவே, பழனி, தண்டபாணி சுவாமிகள் மடம் நில விவகாரத்தில், இந்த அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நிறுத்தப்பட வேண்டுமென்றால், நடுநிலையான அமைப்பு ஒன்றின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; இவ்வழக்கை உடனடியாக CBI வசம் ஒப்படைக்க பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.7.2026 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில், பழனியில் - மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் C. சீனிவாசன் அவர்கள் தலைமையிலும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. K. ரவிமனோகரன், MLA., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.