

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.35 ஏக்கர் நிலம் முறை கேடாக ரூ.2 கோடிக்கு தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் (48), விழுப்புரத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் (56), நிலம் வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளை த்துரை (60), பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி (67), வக்கீல் அன்வர்தீன் (65), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் (38) ஆகியோரை கைது செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பழனியைச் சேர்ந்த வக்கீல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தலை மறைவான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொடைக்கானலில் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் கொண்டு வந்தபோது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்ப டும் ஜஸ்டின் மணிகண்டனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்னும் முழுமையான விசாரணை நடத்தவில்லை.
அதே போல் பத்திர எழுத்தர் ஜெயபிரகாசிடமும் விசாரணை நடத்த முடிய வில்லை. இதன் காரணமாக அவர்கள் 2 பேரயும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
இன்று மாலை 5.30 மணிக்குள் விசாரணையை முடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணைக்காக ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோர் இன்று திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜரான நிலையில் அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே ஜஸ்டின் மணிகண்டன் தனது உடல் நலன் மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதே போல் பத்திர எழுத்தர் ஜெபிரகாஷ் சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி பத்மநாபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சிவச்சந்திரன், வழக்கின் முதன்மை குற்றங்கள், கூட்டுச்சதி, நீதிமன்ற உத்தரவு மீறல் ஆகியவற்றை சுட்டிக் காட்டி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரி வித்தனர். இதனையடுத்து அவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரை சிறையில் அடைக்கப்ப ட்டுள்ள முருகதாஸ் சார்பிலும் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கும் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.