புரட்டாசி திருவிழாவுக்கு தயாராகி வரும் 2,500-க்கும் மேற்பட்ட உருவ மண் சிலைகள்

விழாவிற்கான ஏற்பாடுகளை வாகைகுளம் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
புரட்டாசி திருவிழாவுக்கு தயாராகி வரும் 2,500-க்கும் மேற்பட்ட உருவ மண் சிலைகள்
Published on: 
Summary

திருவிழாவில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் 15 மற்றும் 16-ந்தேதிகளில் வாகைகுளம் கிராமத்தில் ஒன்று கூட உள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கருப்பசாமி கோவில் புரட்டாசி மாத சிலை எடுப்பு திருவிழா ஆண்டுதோறும் 2 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் விமரிசையாக நடைபெறுகிறது.

திருவிழா

இதற்காக 2500-க்கும் மேற்பட்ட மண் சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது, பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டியும், வேண்டுதல் நிறைவேறிய பின்பும் நேர்த்திக்கடனாக உருவ மண் சிலைகளை செய்து, அவற்றை தலைச்சுமையாக சுமந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் செலுத்துவார்கள்.

கருப்பசாமி

அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்காக கிராமத்தில் தயார் செய்யப்பட்டுள்ள சிலைகள் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன. கருப்பசாமி, அய்யனார் சிலைகள் தாய், தந்தை, கணவன், மனைவி வடிவிலான மனித உருவ சிலைகள், டிராக்டர், லாரி, பேருந்து போன்ற வாகன சிலைகள், மருத்துவர், ராணுவ வீரர், போலீஸ் போன்ற தொழில் சார்ந்த சிலைகள், கால்களில் காயம் ஏற்பட்டு குணமாகவும், குணமானவர்களும் கால் வடிவிலும், தலைவலி குணமாக தலை வடிவிலும் என நோய் தீர்க்கும் நேர்த்திக்கடன் சிலைகள் உள்பட 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சிலைகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் சிலை

இது குறித்து மண் சிலை வடிவமைப்பாளர்கள் அண்ணாமலை மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்திற்காக 2 மாதத்திற்கு முன்பே மண் சிலை செய்யும் பணியை தொடங்கி விடுவோம். பக்தர்கள் தங்கள் எண்ணங்களை கூறுவார்கள். அதற்கு ஏற்ப சிலைகளை வடிவமைத்து தருகிறோம். மருத்துவராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டவர், மருத்துவர் சிலையை செய்து கொடுக்க சொல்வார். குழந்தை வரம் வேண்டியவர்கள் தாய்-தந்தை குழந்தையுடன் இருப்பது போல் சிலை கேட்பார்கள். தற்போது வர்ணம் பூசும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றனர்.

விருதுநகர்

இத்திருவிழாவில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் 15 மற்றும் 16-ந்தேதிகளில் வாகைகுளம் கிராமத்தில் ஒன்று கூட உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாகைகுளம் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் நேர்த்திக்கடனை செலுத்த ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com