

தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தினமும் 55-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும் வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் உற்பத்தி பாதிப்பு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை முதல் கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, கவுகாத்தி, எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 45 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம், தற்போது கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரித்து ஒரு கிலோ ரூ55-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் சின்ன வெங்காயம் விலையும் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.80 வரையிலும், வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.110 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.
தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை 71 சதவீதம் உயர்ந்துள்ளது. எல் நினோ வானிலை, மகாராஷ்டிராவில் பெய்த பருவம் தவறிய மழை மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வினியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு காரணம்.
பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், பற்றாக்குறை தொடருவதாலும், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை கூட உயரக் கூடும். வழக்கமாக, பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் மாநில அரசு, தோட்டக்கலை மற்றும் உணவு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது. இப்போதும் தமிழக அரசு இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.