

மாநகர பஸ்களில் 4 நாட்களாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை 38 லட்சமாக உயர்ந்துள்ளது.
அரசு பஸ்களில் பெண்கள், சிறுமிகள் திருநங்கைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே மாநகர பஸ்களில் மட்டும் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் இருந்த நிலையில் ஏசி பஸ்கள் தவிர அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக செல்ல வெற்றி பயணத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டது.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் சராசரியாக தினமும் 35 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். பள்ளி மாணவர்கள், மகளிர் இலவச பயணம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தற்போது அனைத்து பஸ்களிலும் இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதுவரையில் காலியாக ஓடிய அரசு பஸ்கள் இப்போது நின்று கொண்டு பயணம் செய்யக் கூடிய வகையில் கூட்டம் அதிகரித்துள்ளது.
முன்பு சாதாரண பஸ்களில் மட்டுமே இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது ஏசி பஸ் தவிர அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யலாம் என்பதால் பொதுமக்கள் பஸ் நிறுத்தங்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை.
அடுத்தடுத்து 5 நிமிடங்களில் அரசு பஸ்கள் வந்து கொண்டே இருப்பதால் பெண்கள் பயணத்தை எளிதாக தொடர்கின்றனர். காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று அரசு அலுவலகங்கள் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்பட்டன. இதனால் இலவசமாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை 3 லட்சம் வரை உயர்ந்துள்ளது.
இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாநகர பஸ்களில் 4 நாட்களாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை 38 லட்சமாக உயர்ந்துள்ளது.
இன்னும் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயரும். தற்போது மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 இடங்களுக்கு இலவச பயணம் அனுமதி வழங்கப்படவில்லை.
ஓட்டு எண்ணிக்கை முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிய பிறகு தான் பயணம் செய்பவரின் முழு விவரம் தெரியவரும். 10-ந்தேதிக்குப் பிறகு தான் இலவச பயணம் செய்வோரின் எண்ணிக்கை முழுமையாக தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.