வடகிழக்குப் பருவமழை: முழு வீச்சில் தயாராகிறது பெருநகர சென்னை மாநகராட்சி!

சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Greater Chennai Corporation
Published on: 

தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளவும், பொதுமக்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுத் தயார் நிலையில் இயங்கி வருகிறது. மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத பாதிப்புகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் மாநகராட்சி முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலை

மழைக்காலத்தில் வழக்கமாக ஏற்படும் நீர் தேக்கம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுதல் போன்ற புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து விதமான கனரக உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் உடனடியாகப் பயன்படுத்தப்படும் ரம்பங்கள், மரம் அறுக்கும் கருவிகள், மின்சாரத் தேவைகளுக்கான ஜெனரேட்டர்கள், கழிவுநீர் மற்றும் மழைநீரை விரைவாக உறிஞ்சி வெளியேற்றும் அதிநவீன மோட்டார் பம்புகள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவை பயன்பாட்டிற்குத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்யத் திட்டம்

மழைநீர் தேங்கும் இடங்களில் இருந்து தண்ணீரை உடனடியாக உறிஞ்சி வெளியேற்ற அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் தயார் நிலையில் உள்ளன. சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பலத்த காற்றினால் சாலைகளில் முறிந்து விழும் மரங்களை நொடிப் பொழுதில் அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்க சிறப்பு மீட்புக் குழுக்களும் இயந்திரங்களுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

துறைகள் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு

சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மின்சார வாரியம் ஆகியவை இணைந்த மீட்பு ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைக்கால நிவாரணப் பணிகள் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பொதுமக்களின் புகார்களை 24 மணி நேரமும் பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய தாழ்வானப் பகுதிகளில் முதல் நிலை மீட்பர்களும் முன்னெச்சரிக்கையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com