

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆளுகிற கட்சியில் அடைக்கலம் ஆவதற்கு என்று தமிழகத்தில் பொது வாழ்க்கையில் ஈடுபடும் சிலர் உள்ளனர். ஆனால் வாழ்ந்தாலும் மறைந்தாலும் கொள்கையோடு அ.தி.மு.க.வை கோடான கோடி தொண்டர்கள் தாங்கி பிடித்து நிற்கின்றனர்.
இந்த வரலாற்றை தெரிந்து கொண்டு அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் புரிந்து பேச வேண்டும். இனிமேல் எல்லை மீறி பேசினால் கடுமையான எதிர்விளைவுகளை தேர்தல் களத்திலும், மக்கள் களத்திலும் அவர்கள் சந்திக்க வேண்டும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. எத்தனையோ சோதனைகளை பார்த்துள்ளது. உங்களையும் பார்ப்போம். எத்தனை விஜய் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடி யாது. ஏனென்றால் அ.தி.மு.க .வை தொண்டர்கள் தாங்கி பிடித்து வருகிறார்கள்.
நேற்றைய காட்சியை பார்த்து சில சில்லறை பசங்க சிரிப்பது வேதனை அளிக்கிறது. விஜய் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு கூட்டணிக்கு கூவி கூவி அழைத்தீர்கள். ஆனால் லெட்டர்பேடு கட்சி கூட உங்களை நம்பி வரவில்லை.
மந்திரத்தில் மாங்காய் பறிப்பது போல உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்து உள்ளது. உங்களைத் தேடி, ஓடி வருபவர்களை வைத்துக் கொண்டு என்ன நடக்குமோ என தெரியாது. நாங்கள் தேர்தல் களத்தில் தோற்றுப் போய் தான் இருக்கிறோம் தவிர, இறக்கவில்லை.
வாழ்க்கை ஒரு வட்டம் தான். மேலே இருக்கிறது கீழே வரும், கீழே இருக்கிறது மேலே வரும் என்பது இயற்கை நியதி. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 50 சதவீதம் அ.தி.மு.க.வினரை இணைத்து விட்டோம் என கூறுகிறார்.
இது போன்ற அமைச்சர்களை உட்கார வைத்து நாம் பார்க்க வேண்டும் என்பது தலைவிதி.
அமைச்சர் நிர்மல்குமார் அ.ம.மு.க., பா.ஜ.க. என பல கட்சிகளில் இருந்து த.வெ.க.விற்கு சென்றவர்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால் அவர் மீண்டும் அ.தி.மு.க.விலேயே அடைக்கலம் புகுந்திருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.