சௌமியா அன்புமணிக்கு பாராட்டு: நிஷாவின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு!

"தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களின் குரலாக சட்டமன்றத்தில் மிக அழகாகப் பேசினார்."
 Nisha's Emotional Speech
Published on: 

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி உரையை பாராட்டி சின்னத்திரை பிரபலமும், சமூக ஆர்வலருமான நிஷா பேசியுள்ள கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.

சட்டமன்ற நேரலைக்கு நன்றி:

தனது பேச்சைத் தொடங்கிய நிஷா, கடந்த 2 நாட்களாக சட்டமன்றத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பொதுமக்கள் நேரடியாகக் காண்பதற்கு ஏதுவாக நேரலை செய்த தமிழக அரசுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச்சு:

சட்டமன்றத்தில் தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசிய விவகாரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக நிஷா குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசுகையில்:

முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள சௌமியா அன்புமணி, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களின் குரலாக சட்டமன்றத்தில் மிக அழகாகப் பேசினார். "பொறுத்தது போதும் பொங்கி எழுவோம்" என்ற ரீதியில், நம் வீட்டுப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கை வைக்க இனி அனைவரும் அச்சப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பெண்களுக்கு எதிராகக் குற்றம் இழைப்பவர்களை 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் சிறையில் அடைத்துவிட்டு பின்னர் தண்டனை வழங்குவதை விடுத்து, அரபு நாடுகளில் வழங்கப்படுவதைப் போன்ற கடுமையான உடனடி தண்டனைகளை வழங்க வேண்டும் என சௌமியா அன்புமணி ஓங்கி குரல் கொடுத்தார். இத்தகைய துணிச்சலான பேச்சுக்காக ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாக நிஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

விவசாயிகளின் தற்கொலை வேதனை:

தொடர்ந்து விவசாயிகளின் அவல நிலை குறித்துப் பேசிய நிஷா, சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி எழுப்பிய மற்றொரு முக்கிய கோரிக்கையையும் சுட்டிக்காட்டினார். நாட்டில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிய பெரும் புள்ளிகள் எவ்வித பயமும் இன்றி தைரியமாகச் சுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், வெறும் ரூ.1,000, ரூ.50,000 மற்றும் ரூ.1 லட்சம் எனச் சிறிய தொகையைக் கடனாகப் பெற்ற எளிய விவசாயிகள், தங்களின் மானத்திற்கும் ரோஷத்திற்கும் பயந்து, கேட்கப்படும் கேள்விகளைத் தாங்க முடியாமல் இன்றும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.இந்த விவசாயிகளின் நிலையை அரசு உடனடியாகக் கவனிக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி எழுப்பிய குரல் தனக்குக் கூடுதல் சந்தோஷத்தைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.

முதலமைச்சருக்கு நன்றி:

பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் சௌமியா அன்புமணியின் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் எனத் தனது தாழ்மையான வேண்டுகோளை முன்வைத்த நிஷா, இந்தக் கோரிக்கைகளை ஏற்று "அரசு இதனை கண்டிப்பாகச் சரி செய்யும்"என்று உறுதியளித்த தமிழக முதலமைச்சருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com