

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் குளிர்கால விமான சேவைகளை அதிகரித்தாலும், சென்னைக்கு புதிய சேவைகள் குறைவாக உள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து பல முக்கிய இடங்களுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், பெங்களூருக்கு புதிய சேவைகள் தொடங்கப்படுவது தமிழ்நாட்டு பயணிகளின் எதிர்பார்ப்புகளை புறக்கணிக்கிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது குளிர்கால விமான சேவைகளுக்கான புதிய கால அட்டவணையை, வரும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் இயக்கத் தொடங்குகிறது. ஏற்கனவே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், நாடு முழுவதும் கோடை காலங்களில் 3,150 விமான சேவைகளை இயக்கி வந்தது. இப்போது குளிர்காலங்களில் அது 4,100 விமான சேவைகளாக, அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைப்பு விமானங்கள், வாரத்திற்கு 1,330 விமான சேவைகளாக இருந்தது, தற்போது வாரத்திற்கு 1,600 விமான இணைப்பு சேவைகளாக, அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் நாடு முழுவதும் விமான சேவைகளை பெரும் அளவு அதிகரித்துள்ள போதிலும், தமிழ்நாட்டுக்கு குறிப்பாக சென்னைக்கு, பெரும் ஏமாற்றமான நிலையை தான் உருவாக்கி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏற்கனவே, துபாய், சார்ஜா, தமாம், சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களுக்கு, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் விமான சேவைகள், இயக்கப்பட்டு வந்தன. அந்த விமான சேவைகள் அனைத்தும், படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது.
அதேப்போல் உள்நாட்டு விமான சேவைகளின் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், சென்னையில் இருந்து அந்தமான், ஐதராபாத், திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு, விமான சேவைகளை இயக்கி வந்தன. அந்த சேவைகளும், குறைக்கப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்டு விட்டன.
இந்த நிலையில் தற்போதைய குளிர்கால, புதிய அட்டவணையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், ஏற்கனவே இயக்கப்பட்டு, நிறுத்தப்பட்டுள்ள ஏர் இந்தியா, எக்ஸ்பிரஸ் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான வழித்தடங்களில், மீண்டும் புதிதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் விமான சேவைகளை தொடங்கும் என்று, பயணிகள் வெகுவாக எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் குளிர் கால விமான சேவைகள் அட்டவணையில், தமிழ்நாட்டு விமான பயணிகளுக்கு ஏமாற்றமே ஏற்பட்டு உள்ளது.
சென்னை- சிங்கப்பூர்- சென்னை இடையே, தினசரி விமானங்களாக இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள், கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டன. இப்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி முதல் சென்னை- சிங்கப்பூர்- சென்னை இடையே, தினசரி விமானங்களாக, வாரத்துக்கு 14 விமான சேவைகளை புதிதாக இயக்குகிறது. இந்த விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தினமும் அதிகாலை 02.05 மணிக்கு, சிங்கப்பூர் புறப்பட்டு செல்கிறது. அதைப்போல் சிங்கப்பூரில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு, தினமும் இரவு 8 மணிக்கு, சர்வதேச விமான நிலையம் வந்து சேர்கிறது.
இந்த சிங்கப்பூர் புதிய விமான சேவை தவிர, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை துபாய், இலங்கை, கோலாலம்பூர், தமாம், சார்ஜா, மாலத்தீவு உள்ளிட்ட விமான சேவைகள் எதுவும் மீண்டும் தொடங்கவில்லை.
அதேப்போல் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானங்களான அந்தமான், ஐதராபாத், திருவனந்தபுரம், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கவில்லை.
ஆனால் பெங்களூர்- கோவை இடையே வாரத்திற்கு 14 புதிய விமான சேவைகளையும், பெங்களூரு-மதுரை இடையே, வாரத்திற்கு 7 விமான சேவைகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதியில் இருந்து, புதிதாக தொடங்குகிறது.
இவைகள் தவிர பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தமான், ஐதராபாத், திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களுக்கு, சென்னையில் இருந்து புதிய விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் தொடர்ந்து, தமிழ்நாட்டை, குறிப்பாக சென்னையை விமான சேவைகள் இயக்குவதில், புறக்கணித்து வருவதாக, பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.