

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களில் 219 தமிழர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்த நிலையில், 100 பேர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளம் உலகையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இமயமலையில் பனிச்சிகரம் உடைந்து போதோகோஷி, திரிசூலி, நாராயணி ஆகிய 3 நதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வாரி சுருட்டியது.
இதில் 2 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் காணாமல் போனார்கள். இது தொடர்பாக நேபாள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 2,362 பேர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்றுடன் 5 நாட்கள் ஆகும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேறும் சகதியுமாக காணப்படும் பகுதிகளில் உடல்களை தேடி கண்டு பிடித்து மீட்டு வருகிறார்கள். வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கியதால் பல உடல்கள் உருக்குலைந்து சிதைந்து உள்ளன.
பெருவெள்ளத்தால் கடும்பாதிப்பை சந்தித்துள்ள இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேருடன் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு படையினர் களத்தில் உள்ளனர். அவர்கள் உயிர் இழந்தவர்களின் உடல்களை ஒவ்வொரு நாளும் மீட்டு வருகிறார்கள். இதுவரை 682 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே வேளையில் பாதிக்கப்பட்ட இமயமலை பகுதி முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 691 ஆக உயர்ந்து உள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய 3,700 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்தியர்கள், சீனர்கள், தென்கொரிய நாட்டினர் உள்பட வெளிநாட்டினரும் அடங்குவார்கள். காயங்ளுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க துன்சே, திரிசூலி ஆகிய இடங்களில் அவசரகால சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். இதில் 275 இந்தியர்கள் அடங்குவர். அவர்களை தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் அடங்கிய குழு டெல்லி சென்றது. அவர்கள் டெல்லியில் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள். இதன் மூலம் நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். ஏற்கனவே 21 தமி ழர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து மூன்று அமைச்சர்கள் நேற்று இரவு சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 3 நாட்களாக முதல்-அமைச்சர் விஜய் ஆணைக்கிணங்க நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்டு பல்வேறு பணிகள் மேற்கொண்டோம். தற்போது அயலக தமிழர் துறை அமைச்சர் தென்னரசு டெல்லியில் தங்கி மீட்பு பணிகளை கண்காணித்து கொண்டிருக்கிறார்.
இந்திய வெளியுறவு துறை செயலாளரை நேரில் சந்தித்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டில் இருந்து 319 பேர் பல்வேறு குழுக்கள் மூலமாக நேபாளம் சென்று உள்ளனர். இதில் 219 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வருகிற 31-ந்தேதி (நாளை) இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள்.
மீதமுள்ள 100 தமிழர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் மாயமானவர்கள் பட்டியலில் இருந்து வருகிறார்கள். ஹெலிகாப்டர் மூலமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நேபாள வெள்ளம் சர்வதேச பேரிடராக உள்ளது. பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கூட உடைமைகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. 2 நாடுகளின் ராணுவம் மீட்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளன.
கும்பகோணம் ஏஜென்சி முலம் சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழுவில் சென்ற 36 பேரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
மற்றொரு குழுவாக சென்ற 150 பேர் சீன எல்லை வழியாக காத்மாண்டு வந்து உள்ளனர். இவர்கள் பல்வேறு விமானங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் 39 பேர் குழுவாக சென்றவர்கள் பத்திரமாக உள்ளனர். இதில் 33 பேர் 31-ந்தேதி மாலை கோவைக்கு வந்து சேருகிறார்கள். 6 பேர் சென்னைக்கு வந்து சேருவார்கள்.
மகாதேவி யாத்திராவின் சேர்ந்த 49 பேர் எங்கு இருக்கிறார்கள் என்பது தொடர்பாக தகவல் தெரியவில்லை. 100 பேரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் பங்கேற்கிறோம். இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் உள்ளோம்.
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாகவும் சென்று உள்ளனர். மத்திய அரசின் வார் ரூம் முலமாக விரைவாக நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தில் அனைவரும் ஒன்று இணைந்துதான் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்பது ஒரே நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
நேபாள வெள்ளபாதிப்பு ஏற்பட்டு 5 நாட்கள் ஆகியும் தமிழர்கள் 100 பேரின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளதால் அவர்களது உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நேபாளத்திற்கு சென்று மாயமானவர்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகள் தங்கமதி (வயது 49). தஞ்சாவூரில் வசித்து வரும் இவர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கேரளத்தில் வசித்து வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த 23-ந்தேதி தங்கமதி நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். 26-ந்தேதி வரை குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் எந்த தகவலும் இல்லாததால் தங்கமதியை மீட்டுத்தரக் கோரி அவரது குடும்பத்தினர் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம், தலைமை செயலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் நேபாள தூதரக உதவி எண்களை தொடர்பு ெகாண்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த செல்வம் (48). அவரது மனைவி சித்ரா தேவி (40), தாய் சரஸ்வதி ஆகியோருடன் ெசன்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் நேபாளத்திற்கு கடந்த 14-ந்தேதி ஆன்மீக சுற்றுலா சென்றனர். அவர்களுடன் 49 பேர் சென்றனர். 27-ந்தேதி பயணத்தை நிறைவு செய்து ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்திற்கு பின்னர் சுற்றுலா குழுவினர் மாயமாகினர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இருந்தபோதும் ஆன்மீக சுற்றுலா சென்ற 3 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள், கோடாங்கிபட்டி கிராமத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்ைகை விடுத்துள்ளனர்.