

மாணவர்களையும் இளைஞர்களையும் சுண்டி இழுக்கும் வகையில் மூவர்ண தேசியக்கொடி அச்சடிக்கப்பட்ட சிறப்பு 'டி-ஷர்ட்கள்' விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வரும் 15-ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய திருநாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேசபக்தி அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற பின்னலாடை நகரமான திருப்பூரும் தனது பங்கிற்குத் தேசபக்தி வண்ணத்தில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டுத் திருப்பூரின் ஆடை உற்பத்தித் துறை புதுப்புது ஆடைகளை சந்தைக்குக் கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, இளைஞர்களையும் மாணவர்களையும் கவரும் வகையில் ஆடை வடிவமைப்பாளர்கள் விதவிதமான மூவர்ண ஆடைகளைத் தயார் செய்து களமிறக்கியுள்ளனர்.
திருப்பூரில் புகழ்பெற்ற காதர்பேட்டை ஜவுளிச் சந்தை, நெசவாளர் காலனி, கோல்டன் நகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வணிகப் பகுதிகளில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களில் சுதந்திர தினத்தை மையப்படுத்திய சிறப்பு ஆடை விற்பனை தற்போது விறுவிறுப்படைந்துள்ளது.
குறிப்பாக, மாணவர்களையும் இளைஞர்களையும் சுண்டி இழுக்கும் வகையில் மூவர்ண தேசியக்கொடி அச்சடிக்கப்பட்ட சிறப்பு 'டி-ஷர்ட்கள்' விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தூய வெள்ளை நிற ஆடையின் பின்னணியில், கம்பீரமான மூவர்ணக் கொடி, நடுநாயகமாகத் திகழும் அசோக சக்கரம், இதய வடிவிலான மூவர்ண டிசைன்கள் மற்றும் 'சுதந்திர தின நல்வாழ்த்துகள்' போன்ற தேசியப் பற்றை வெளிப்படுத்தும் கம்பீரமான வாசகங்கள் பொறிக்கப்பட்டு விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன. கடைகளின் முகப்பில் வரிசையாகத் தொங்கவிடப்பட்டுள்ள இந்த ஆடைகள், அந்த வழியாக செல்லும் அனைவரின் பார்வையைக் கவர்ந்து வருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நண்பர்களுடனான கொண்டாட்டங்களில் அணிவதற்காக, இளைஞர்களும் மாணவ-மாணவிகளும் தங்களின் பெற்றோருடன் வந்து ஆர்வத்துடன் இந்த மூவர்ண ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில்:-
பொதுவாகப் பாலியஸ்டர் மற்றும் காட்டன் கலந்த ரகங்களில் இந்த டி-ஷர்ட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாக வாங்கும் வகையில் 120 ரூபாய் முதல் 450 ரூபாய் வரையிலான பட்ஜெட் விலையில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. சுதந்திர தினம் நெருங்குவதால் வரும் நாட்களில் இதன் விற்பனை மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.