

இந்தியாவின் அடுத்த பிரதமராக முதலமைச்சர் விஜய்தான் வருவார் என்று த.வெ.க.வினர் பேசி வருவதற்கு அவர்கள் இன்னும் ரசிகர் மனநிலையில் இருந்து வெளிவரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துக்கு த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆதரவு தரவில்லை என்றால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கும் என்பது உண்மைதான். 107 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருந்த நிலையில் கவர்னரை சந்தித்து தனிப்பெரும் கட்சி என்ற நிலையில் எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள்.
14 நாட்களில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்தார்.
நியாயப்படி கவர்னர் அவருக்கு அழைப்பு விடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அழைக்கவில்லை என்பதையும் தாண்டி தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரினால் அழைப்பேன் என்று கவர்னர் கூறியது எங்களுக்கு மிகுந்த வலியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.
நன்றி உணர்வு
நித்தியத்தை இழந்து நிச்சய தன்மையை உடுத்தி நின்றபோது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. அந்த நன்றி உணர்வோடுதான் இன்றும் இருக்கிறோம். அதற்காகத்தான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை ஆகிய 2 துறை அமைச்சர்களை இடம்பெறச் செய்தோம்.
1967-க்கு பிறகு காங்கிரஸ் த.வெ.க.வின் பெருந்தன்மையால் அதிகாரமுள்ள கட்சியாக வளர்ந்து இருக்கிறது. இந்த பெருந்தன்மையையும் நன்றி உணர்ச்சியையும் ஒருபோதும் முதலமைச்சர் விஜய் பட்டுபோக விடமாட்டார்.
இன்னும் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தி.மு.க. வெறும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த நிலையில் கலைஞர் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.
அப்படி இருந்தும் ஒருவருக்குகூட அமைச்சர் பதவி வழங்கவில்லை. ஆனால் இப்போது 5 இடங்கள் மட்டுமே பெற்றுள்ள காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த விசாலமான மனப்பான்மை விஜய்யை தவிர வேறு எந்த தலைவருக்கும் வராது.
தேசிய அரசியலில் நாளை என்ன நடக்கும் என்பது இன்றே தெரியாது. முதலமைச்சர் விஜய் பிரதமர் ஆவார், ஆக வேண்டும் என்று சொல்வதை எல்லாம் இயல்பாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
த.வெ.க. தொண்டர்கள் தங்கள் ஆர்வம் காரணமாக அவ்வாறு கூறலாம். தங்களை ஆட்கொண்ட தலைவனை பிரதமராக எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. இது காங்கிரஸ் கட்சியை தாக்குவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
த.வெ.க.வினர் ரசிகர்கள் மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை என்பதும் உண்மைதான். ரசிகர் மன்றமாக இருந்து மக்கள் இயக்கமாக மாறி இன்று ஆட்சியை பிடித்து இருக்கிறோம்.
எனவே அந்த மனநிலை அவர்களிடம் இருப்பது இயல்பானதுதான். தமிழ்நாட்டில் இருந்து இதுவரை பிரதமராக யாரும் வந்ததில்லை.
ஆந்திராவில் இருந்து நரசிம்மராவ் பிரதமரானார். கர்நாடகாவில் இருந்து தேவ கவுடா பிரதமர் ஆனார். எனவே தமிழ்நாட்டில் இருந்தும் பிரதமர் வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பலாம். அதற்காக நாங்கள் விஜய்தான் பிரதமராக வர வேண்டும் என்று சொல்லவில்லை. அதை காலத்தின் கையில் விட்டு விடுகிறோம்.
இதற்காக காங்கிரசுடன் பகமை பாராட்டும் மன நிலையில் நாங்கள் இல்லை. கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொன்னபோது கூட எதிர்வினையாற்றவில்லை.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் நயத்தக்க நாகரீகத்துடனேயே முதலமைச்சர் விஜய் பேசினார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தில் அரசியல் மாற்றமும், ஆட்சி மாற்றமும் நிகழ்ந்து இருக்கிறது. இன்னும் பல அதிசயங்களை அவர் நிகழ்த்துவார்.
இவ்வாறு அவர் கூறினார்.