

பயணிகளிடம் முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் டிரைவர்கள், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து டிரைவர்கள், நடத்துனர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி பஸ்களை நாள்தோறும் இயக்கி வருகிறது. பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக அரசுக்கு புகார் பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இத்தகைய நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுவதாகவும், 2 அல்லது 3 பஸ்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் எந்த பஸ்சும் நிற்காமல் செல்வதாகவும், பஸ்சை பிடிப்பதற்காக ஓடிவரும் பயணிகளிடம் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் முறையற்ற வகையில் பேசுதல், அடுத்த பஸ்சில் பயணம் செய்யுமாறு கூறுதல் போன்ற செயல்கள் நடைபெறுவதாகவும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவது முதன்மையான கடமையாகும். எனவே, இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, சாதாரண கட்டண பஸ்கள் அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் தவறாமல் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.
2 அல்லது அதற்கு மேற்பட்ட பஸ்கள் ஒரே நேரத்தில் ஒரு நிறுத்தத்திற்கு வந்தாலும், டிரைவர் பஸ்சை பாதுகாப்பான இடைவெளியில் நிறுத்தி பயணிகளை ஏறி, இறங்கி செல்ல அனுமதிக்க வேண்டும். பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள், மாணவ, மாணவிகள் பஸ்சில் பாதுகாப்பாக ஏறி, இறங்க தேவையான உதவிகளை வழங்க வேண்டும். பயணிகளிடம் கடுமையாக பேசுதல், அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
பயணிகளை ஏற்ற மறுத்தல் மற்றும் முறையற்ற வகையில் நடந்துகொள்ளுதல் ஆகியவை கடுமையான ஒழுங்கீனச் செயலாக கருதப்பட்டு புகார் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் தங்களது பணிமனை சார்ந்த டிரைவர், நடத்துனர்கள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.