

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் உடன் சேர்ந்து திமுக 2026 தேர்தலை சந்திக்காமல் இருந்திருந்தால், திமுக-வுக்கு 57 இடங்கள் கிடைத்திருக்காது. காங்கிரசின் பலத்தில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. எங்களால்தான் அவர்கள் வெற்றி பெற்றார்களை தவிர, அவர்களால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம், வெற்றி பெற்றோம் என்று காலங்காலமாக வாயை திறக்கக் கூடாது என்பதற்காகத்தான் த.வெ.க. உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தோம்.
ஒரு காலத்தில் காங்கிரசை பார்த்து திமுககாரர்கள் என்னென்ன பேசினார்கள் தெரியுமா., உங்கள் ஊரில் ஐந்து பேர் இருப்பார்களா?. உங்களையெல்லாம் ஒரு சாக்கு பையில் கட்டிவிடலாமா? ஊருக்கு 4 பசங்க இருப்பீங்க. இது ஒரு கட்சி. உங்களை மாட்டு வண்டியில் ஏற்றி விடலாமா? என்று சொன்ன தலைவர்கள் என்று எனக்கு பதில் சொல்கிறார்கள்.
59 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் காங்கிரஸ்க்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார். காமராஜர், பக்தவச்சலம் ஆட்சிக்காலத்தில் சி. சுப்ரமணியம் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார். அதன்பின் 59 ஆண்டுகள் கழித்து மதுரை மேலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான் உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கிறேன்.
இதை பொறுக்க முடியாதவர்கள்தான் அந்த நடைமுறையை எடுத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார்கள். ஒரு பைசா லஞ்சம் வாங்காமல் ஒரு நிர்வாகத்தை மேலூர் மக்களுக்கு தர முடியும். திமுக-வில் மந்திரியாக இருந்த யாராவது ஒருவரை இப்படி தைரியாமாக சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.
உங்கள் சொத்துகளை கணக்கு எடுக்க சொல்வோமா? உங்கள் சொத்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாமா? நீங்க எங்கிருந்து கொண்டு வந்த சொத்து என்று கணக்கு கேட்கலாமா?. நீங்கள் சம்பாதித்தது உங்கள் அப்பா வீட்டு சொத்தா? பாட்டன் வீட்டு சொத்தா?.
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் திமுக. காங்கிரஸ் அமைச்சராக இருக்கும் நான் பகிரங்கமாக தெரிவிக்கிறேன்., என்னைக் குறை சொல்லி பார்க்கலாம் என்பதெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளக் கூடாது. இந்த அரசியலை கண்டெல்லாம் விஸ்வநாதன் பதுங்கு ஓடமாட்டான். துணிஞ்சி நிற்பான். மக்களை நம்பி இருக்கிறேன். மக்கள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்களுடைய வாக்கிற்குதான் மதிப்பே தவிரே, தோற்றுப்போனவர்கள் கேட்கின்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்கிற நிலையில் காங்கிரஸ் இல்லை.
இவ்வாறு விஸ்வநாதன் தெரிவித்தார்.