

முழுமையாக கோவில் நடைமுறைகள், தரிசனம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரைவு தரிசனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது. விடுமுறை தினமான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ராஜகோபுரம் முன்பு, கோவிலின் உட்புறம் மற்றும் கோசாலை ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கிருந்த பக்தர்களிடம் கோவிலில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பக்தர்கள் நாங்கள் கிரிவல நாட்களில் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வருகிறோம். அதுபோன்ற நாட்களில் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய முடியவில்லை. எளிதில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் முதல் முறையாக ஆய்வுக்காக வந்திருக்கிறேன். முழுமையாக கோவில் நடைமுறைகள், தரிசனம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரைவு தரிசனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது இணை ஆணையர் தரணிதரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.