அர்ச்சனா கல்பாத்தியை நியமித்தது ஏன்? - விளக்கம் கொடுத்த அமைச்சர் ரமேஷ்

தேர்வுக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
minister ramesh, archana kalpathi
Published on

அர்ச்சனா கல்பாத்தியை நியமித்தது ஏன்? என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான குழு உறுப்பினர்களில் ஒருவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் அமைக்கப்பட்டும் இந்தக் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். இந்தத் தேர்வுக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்தார்.

அர்ச்சனா கல்பாத்தியின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நியமனம் ஏன்?

மாநில அறங்காவலர் குழுவைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப முக்கியமான ஒரு பங்கை ஆற்றுகிறது. பத்து லட்சத்திற்கு மேல் வருவாய் இருக்கக்கூடிய கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிப்பதில் இக்குழு மிகப்பெரிய பங்காற்றுகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளுக்கு இந்தக்குழு ஒரு மிகப்பெரிய உறுதுணையாகச் செயல்படப் போகிறது.

இந்தக் குழுவில் மொத்தம் 7 பேரை நியமித்துள்ளோம்.

ஆன்மிக ரீதியாக தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்காக மயிலம் ஆதினம் அவர்களைத் தலைவராகப் போட்டிருக்கிறோம்.

சட்ட ரீதியான வழிகாட்டுதல்களுக்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை இணைத்துள்ளோம்.

அர்ச்சனா கல்பாத்தி மேடத்தைப் பொறுத்தவரை, அவரை இந்த உலகம் வெறும் சினிமா தயாரிப்பாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால், இது போன்ற விமர்சனங்களை வேண்டுமென்றே எழுப்பி வருகிறார்கள்.

அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கும் மற்றொரு முகம் உள்ளது. அவர் தமிழ்நாட்டில் 10-க்கு மேற்பட்ட கோவில்களில் தனது சொந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கி பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார். அவருடைய மாமனார் சீனிவாசன் மிகப்பெரிய தனியார் குழுமத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பல 100 கோடிகள் செலவு செய்து நிறைய திருப்பணிகளைச் செய்துள்ளார்.

ரூ.100 கோடி செலவில் திருப்பணிகள்

அந்தக் குடும்பத்திலிருந்து கோவில்களுக்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாலும், அந்த நல்லெண்ணம் இருப்பதாலும்தான் அவரை இந்தக்குழுவிற்குள் கொண்டு வந்தோம்.

இதன்மூலம், கோவில்களுக்கு தங்களது சொந்த நிதியிலிருந்து நன்கொடைகள் வழங்கி திருப்பணிகள் செய்ய விரும்புபவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு சிறந்த முன்னெடுப்பாக இது இருக்கும்.

இந்தக் குழுவின் செயல்பாடுகள் எதிர்வரும் காலங்களில் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com