நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது

194 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியை எட்டியது.
காவிரி நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்வரத்து அதிகரிப்பு
Published on
Summary

மேட்டூர் அணையை திறப்பதற்காக முதலமைச்சர் விஜய் நாளை மறுதினம் சேலம் செல்கிறார். அங்கிருந்து மேட்டூர் அணைக்கு சென்று பாசனத்திற்கான தண்ணீர் திறக்க உள்ளார்.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக நீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.

11 ஆயிரத்து 312 கனஅடி

அதன்படி கபினி அணையில் இருந்து விநாடிக்கு 6,600 கனஅடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4712 கன அடி வீதமும் என மொத்தம் 11 ஆயிரத்து 312 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல்

இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 7500 கன அடியாக தொடர்ந்து வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சீராக இல்லாமல் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றுடன் தடை 15-வது நாளாக நீடிக்கிறது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளிலும், காவிரி ஆற்றங்கரை ஓரங்களிலும் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகா ரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணை

ஒகேனக்கல்லில் இருந்து தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து 6702 கன அடியாக இருந்த நிலையில் மாலையில் 7022 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 6,887 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 89.95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலையில் 90.07 அடியாக உயர்ந்தது.

194 நாட்களுக்கு பிறகு அடி

கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நீர்மட்டம் 90.07 அடியாக இருந்த நிலையில் அப்போது அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 27 கன அடி மட்டுமே இருந்தது. இந்த நிலையில் 194 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியை எட்டியது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 90.30 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 52.99 டி.எம்.சி. உள்ளது.

நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையின் 16 கண் மதகு பகுதியில் நீரின் பரப்பு அதிகரித்து, பாறை திட்டுகள் படிப்படியாக நீரின் மூழ்கி வருகின்றன.

அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க மேட்டூருக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com