

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி இந்தியா கூட்டணி இன்று டெல்லியில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தின்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த கைது சம்பவத்திற்கு காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக வெளியிட்டுள்ள சமூக வலைதள கண்டனப் பதிவில்,
“தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எஸ்.ஐ.ஆர். நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது.
எஸ்.ஐ.ஆர். நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது.
கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.