

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டல் கூட்டரங்கில் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான 10 நாட்கள் பயிற்சி முகாம் தொடங்கியது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.
இந்த முகாம் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. முகாமில் மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, சென்னை மாநகராட்சி குழு தலைவர் எம்.எஸ். திரவியம், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கலீல் ரகுமான், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
2019-ம் ஆண்டு ராகுல் காந்தி நீட் வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என வாக்குறுதியும் கொடுத்தார். இந்த மாதிரி மோடி வாக்குறுதி கொடுத்தாரா? அண்ணாமலையுடைய உள்குத்து வேலையால், கட்சி 4 சீட்டில் இருந்து ஒரு சீட்டு எம்.எல்.ஏ ஆகிப்போய் அந்த கட்சியினுடைய நிலை பரிதாபமாக உள்ளது.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறோம் என்று சொன்னார்கள் அனைத்து, மாநிலங்களிலும் மாணவர்களை ஓட விட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து, மாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை, குறிப்பாக வட இந்தியாவில் வீசுகிறது. மாணவர்களுடைய, புரட்சி பெரிய புரட்சியாக மாறிக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது.
எங்களை, பொருத்தமட்டில் எங்களது கூட்டணி பலமாக இருக்கிறது. தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியை தமிழ் நாட்டில் பெறப்போகிறது. ராகுல் காந்தியை பொருத்தமட்டில், தமிழ்நாட்டுக்கு நீட் கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
அவருடைய, அந்த வாக்குறுதியை தமிழக மக்கள் மிகப் பெரிய அளவில் எப்போதும் மதிப்பார்கள். ராகுல்காந்தி 2 ஆண்டுகளாக வினாத்தாள் கசிவு பற்றி பேசி வருகிறார். அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேள்வி கேட்டு வருகிறார்.
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு, மோடி அரசு வந்ததில் இருந்து 152 முறை பேப்பர் லீக் ஆகி இருக்கிறது. ராகுல் காந்தி 2 ஆண்டுகளாக பேசி வந்ததை, தற்போது மாணவர்களும் பேச தொடங்கி விட்டனர்.
ராகுல் காந்தியின் குரல் எவ்வளவு பலமாக மக்களுடைய ஆதரவோடு மேலே எகிறி வருகிறது, என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ராகுல் காந்தியின் விடாமுயற்சியை பாராட்டுகிறோம்.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி பேசினார்.