

பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் சென்னை மெட்ரோவின் இந்த முயற்சி இந்த ஆண்டின் மெட்ராஸ் டே கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது.
சென்னைக்கு வயது 387.
அன்றைய சென்னை முதல் இன்றைய சென்னை வரை இந்த நகரத்தின் தோற்றத்தையும், மாற்றத்தையும் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவெடுத்து வரும் மாற்றங்கள் ஆஹா... நம்ம சென்னை என்று கர்வப்பட வைக்கிறது.
வரலாற்று சிறப்புமிக்க சென்னையின் வயது ஆங்கிலேயர்கள் 1639-ம் ஜார்ஜ் கோட்டை கட்ட இடம் வாங்கிய காலத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. சென்ன பட்டணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நமது நகரம் 1996-ல் சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சென்னையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் போல் கொண்டாடி மகிழ்கிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு புதுமையாக மெட்ரோ ரெயிலையே இசை கச்சேரி அரங்கமாக மாற்றி கொண்டாட திட்டமிட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்த தனியார் நிறுவனம் சமூக வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்ட 30 நிமிடங்களிலேயே முன்பதிவும் முடிந்தது.
இரவு 11 மணிக்கு வழக்கமான மெட்ரோ ரெயில் சேவை முடிந்ததும் கொண்டாட்டத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் திரண்டார்கள்.
நள்ளிரவு 12 மணிக்கு ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் அடையாள சின்னத்துடன் வந்தவர் பிறந்தநாள் கேக்கை வெட்டினார். அப்போது ‘ஹேப்பி பர்த்டே டூ சென்னை’ என்று உற்சாகமாக பாடினார்கள்.
அதன் பிறகு அனைவரும் மெட்ரோ ரெயிலில் ஏறினார்கள். அந்த ரெயில் நகரும் அரங்கமாக மாற்றப்பட்டு இருந்தது. கானா இசைக் குழுவினர் ரெயிலுக்குள் கச்சேரியை தொடங்கியதும் ரெயில் புறப்பட்டது.
விமான நிலையம் வரை சென்று விட்டு மீண்டும் கோயம்பேட்டுக்கு திரும்பியது. சுமார் 2 மணி நேரம் ரெயிலில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது ஆட்டம் பாட்டத்துடன் சென்னையின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த பயணத்தில் பொதுமக்கள் ஈடுபாடு அதிகமாக இருந்தது.
வித்தியாசமாக நடந்த இந்த நிகழ்ச்சி இந்தியாவிலேயே முன்மாதிரி நிகழ்ச்சியாக அமைந்ததாக கூறினார்கள். இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மறக்க முடியாத அனுபவம் என்று கூறினார்கள்.
வழக்கமாக அமைதியான பயணத்திற்கு பெயர் பெற்ற மெட்ரோ ரெயில் இன்று சென்னைவாசிகளின் உற்சாகக் குரல்களாலும் கானா பாடல்களாலும் விழா கோலம் பூண்டது. இந்தியாவில் முதல் முறையாக ஓடும் ரெயிலிலேயே இப்படி ஒரு கொண்டாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியிலும் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் சென்னை மெட்ரோவின் இந்த முயற்சி இந்த ஆண்டின் மெட்ராஸ் டே கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது.
‘மெட்ராஸ் டே’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பேட்டி வருமாறு:-
மெட்ரோ ரெயிலில் நடந்த சென்னை தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது நேரம் போனதே தெரியவில்லை. கானா பாடல்கள் உட்பட பழைய காலத்துப் பாடல்கள் முதல் தற்போதைய டிரெண்டிங் பாடல்கள் வரை அனைத்தும் அருமையாகப் பாடப்பட்டன. இந்த நிகழ்ச்சி மனதிற்குப் பெரு மகிழ்ச்சியளித்தது. அடுத்தமுறை விமானத்தில் இதுபோன்று சென்னை தினத்தைக் கொண்டாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
சூப்பர் சென்னை இணையதளத்தின் மூலம் மெட்ரோ ரெயிலில் கொண்டாட்டம் நடக்கவிருப்பதை அறிந்து நண்பர்களுடன் வந்தேன். மெட்ரோவில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் முதன் முறையாகப் பார்க்கிறேன். என்றும் மறக்க முடியாத இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அடுத்த முறை இதைவிடப் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும். மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளைக் கொண்டாடியது சென்னை வாசிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது’ என்றார்.