

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக வரும் வரத்து குறைந்துள்ளதால், சென்னையில் வெங்காயத்தில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு வெங்காயம் அனுப்பி வைக்கவில்லை என்றால், ஒரு கிலோ ரூ.100ஐத் தொடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக ஒரு நாளைக்கு 1600 டன் வெங்காயம் வரும் என்றும், தற்போது ஒரு நாளைக்கு 600 முதல் 800 டன் வெங்காய வரத்தே இருப்பதாகவும் இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.20ல் இருந்து ரூ.60 வரைக்கும், சில்லறை விலையில் ரூ.80 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
“கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, நகரில் வெங்காய விலை உயர்வு காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலிருந்து வரத்து சீராக இருந்தது, அதன் பிறகு வரத்து குறைந்துவிட்டது,” என்று கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பி. சுகுமாரன் தெரிவித்தார்.
இதே நிலையில் சென்றால் அடுத்த 15 நாட்களில் விலை கிலோவிற்கு ரூ.100 என உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து சென்னைக்கு 840 முதல் 850 டன் வெங்காயத்தை அனுப்பியுள்ளது.
மத்திய கிடங்கு கழகம் மூலம் ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்புச் சரக்கு ரயில் வாயிலாக இந்த வெங்காயம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து லாரிமூலம் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு, விநியோகிக்கப்படும்.
இந்த வெங்காயம் நாபெட் (NAFED), என்சிசிஎப் (NCCF) மற்றும் கேந்திரிய பண்டார் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் தெலங்கானாவில் இருந்து கோயம்பேட்டிற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.
நாசிக் மற்றும் பல்லாரியில் பெய்த கனமழையால் அங்கு விநியோகம் பாதிக்கப்பட்டு, சென்னைக்கு வரத்து குறைந்துள்ளது.
அடுத்த 10 முதல் 15 நாட்களில் அங்கு விநியோகம் அதிகமானால் மீண்டும் வரத்து சுமூகமாகி இயல்புநிலை திரும்பும் என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.