

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் நித்யா ராமன், 16 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் கூவம் குடிசைப்பகுதி மக்களுக்காக அவர் குரல் கொடுத்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் (45) வெற்றி பெற்றார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், எம்.ஐ.டி.யில் நகர்ப்புற திட்டமிடல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர் நித்யா ராமன்.
2010 முதல் 2013 வரை சென்னையில் 'சென்டர் பார் டெவலப்மென்ட் பைனான்ஸ்' எனும் அமைப்பு மேற்கொண்ட 'டிரான்ஸ்பரன்ட் சென்னை' என்ற தலைப்பிலான களப்பணியை தலைமை தாங்கி நடத்தி உள்ளார்.
இந்த அமைப்பு சென்னையில் குடிசை பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் கழிப்பறை வசதி எப்படி உள்ளது? என ஆய்வு நடத்தியது.
நித்யா ராமனும், அவரது குழுவினரும் ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் குறிப்பேடுகளுடன் சென்னையின் களப்பணிகளை மேற்கொண்டனர்.
இதற்காக சென்னையின் குடிசைப்பகுதிகளுக்கு சென்ற நித்யா ராமன், அங்குள்ள பொது கழிப்பறைகளை நேரில் பார்வையிட்டார்.
மேலும், சென்னையில் குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களின் தரவுகளை திரட்டி, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.
சென்னையின் நீர்வழிகள், குறிப்பாக கூவம் ஆற்றங்கரையோரம் இருந்த குடிசை பகுதிகளை அரசு தீவிரமாக அகற்ற தொடங்கியபோது, நித்யா ராமன் ஏழை மக்களுக்கு ஆதரவாக நின்றார்.
இவர்களை வெகுதொலைவில் உள்ள குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிராக குரல் கொடுத்தார்.
அடிப்படை வசதிகள் எதையும் வழங்காமல், இத்தகைய வெளியேற்றங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையே பறித்துவிட் டன என அரசுக்கு சுட்டிக்காட்டினார்.
மேலும் சென்னை நங்கநல்லூரில் 'எக்ஸ்னோரா' மற்றும் 'தில்லை கங்கா நகர் குடியிருப்போர் நலச் சங்கம்' போன்ற அமைப்புகளுடன் இணைந்து மக்கள் பணியாற்றினார்.
சென்னையில் நித்யா ராமனுடன் இணைந்து மக்கள் பணிகளை மேற்கொண்டவர்கள், நித்யா ராமன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயராக வெற்றி பெற்றதை தொடர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.