

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தொடர்ச்சியாக 4,399 நாட்கள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் மிக நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தேசத்தின் சாதனை சரித்திரத்தில் இது மாபெரும் மைல்கல். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நீண்ட நெடிய பயணத்தின் முக்கிய அடையாளம். மக்கள் பணியே மகேசன் பணி என வாழும் மக்கள் தலைவருக்கு பாரத தேசத்து மக்கள் அளித்துள்ள மகுடம் இது.
கடந்த 12 ஆண்டுகளில் பாரத நாடு மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது. அந்த மாற்றங்களின் மையப்புள்ளியாக திகழ்பவர் பிரதமர் நரேந்திர மோடி.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பெரும் பங்காற்றி வருகிறது. பல ஆண்டுகளாக நாடு பெற்றுள்ள வளர்ச்சியின் பலன்களைப் பெறாமல் விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு இன்று அனைத்து உதவிகளும் நேரடியாகக் கிடைக்க பிரதமர் மோடி தலைமையில் பாரத நாடு இன்னும் பல்லாண்டுகளுக்கு வெற்றி நடைபோடும். உலகின் குருவாய் பாரதம் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.