

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி ஒரே மாதத்தில் அந்த பகுதியை சேர்ந்த 2 பேரை அடித்து கொன்றது. இதனால் அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு டிரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
ஓவேலி மலைப்பகுதியில் அடர்ந்த வனம், தேயிலை-காப்பி தோட்டங்கள் மற்றும் புதர்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் அந்த புலியின் இருப்பிடத்தை நேரடியாக கண்டறிவதில் சவால்கள் ஏற்பட்டு உள்ளன.
இதையடுத்து புலியின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் தேடுதல் பணியை மேலும் தீவிரப்படுத்த கும்கி யானைகளை பயன்படுத்துவது என்று வனத்துறை முடிவு செய்தது.
அதன்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் ஓவேலி பகுதிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அடர்ந்த புதர்கள் மற்றும் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத வனப்பகுதிகளிலும் கும்கிகள் உதவியுடன் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இதற்கிடையே ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள் மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையின்றி தனியாக வெளியே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
புலியின் நடமாட்டம் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். புலியை நேரில் பார்க்க நேரிட்டால் அருகே செல்லவோ, புகைப்படம்- வீடியோ எடுக்க பின்தொடரவோ கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.