சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பணத்தையும், செல்போனையும் திருடிய கொள்ளையன் ஒருவன், போலீசாரிடம் மாட்டிக்கொண்டதும் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர் சொந்தமாக ஒரு தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் தனது மோட்டார்
சைக்கிளில் கோயம்பேடு 100 அடி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பலத்த மழை பெய்ததால், மழையில் இருந்து தப்பிக்க கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திற்குள் சென்றார். நீண்ட தூரப் பயணம் மற்றும் நள்ளிரவு நேரம் என்பதால், அசதி காரணமாக பேருந்து நிலையத்திலேயே அருள் படுத்துத் தூங்கியுள்ளார்.
நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், தூங்கிக் கொண்டிருந்த அருளின் அருகே ஒரு மர்ம வாலிபர் வந்து அமர்ந்தார். அருள் நன்கு தூங்குவதைக் நோட்டமிட்ட அந்த நபர், மெதுவாக அவரது சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.2,800 ரொக்கப் பணம் மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களைத் திருடினான். திருடிய பொருட்களுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
அப்போது அந்த வாலிபரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரைச் சூழ்ந்து மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சபாநாயகம் மற்றும் போலீஸ்காரர் பாண்டிச்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொள்ளையனைப் பொதுமக்களிடம் இருந்து மீட்டு முறைப்படி கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர்.
யாரும் எதிர்பாராத விதமாக, அந்த கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை திடீரென வெளியில் எடுத்தான். "யாராவது என் அருகில் வந்தால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்" என்று கத்தியபடி, தன் கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொண்டான்.
ரத்தம் சொட்டச் சொட்ட தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று யோசிப்பதற்குள், அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போலீஸ் பிடியில் இருந்த கொள்ளையன் தனக்குத்தானே கத்திக்குத்து நிகழ்த்தித் தப்பிய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
தப்பியோடிய மர்ம கொள்ளையன் யார்? அவனுக்குக் காயம் பலமாக இருக்கிறதா? என கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.