அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்
Published on

திருவண்ணாமலையில் வருகிற 26-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம் விநாயகர் உற்சவம் நடந்தது.

இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 5.40 மணி அளவில் துலா லக்கினத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

நவம்பர் 22-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 23-ந்தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் நவம்பர் 26-ந்தேதி ஏற்றப்படுகிறது.

26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

  26-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com