'மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்' என்று பெயர் சூட்ட வேண்டும்' - அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை

காலை உணவுத்திட்டத்தால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள். இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது.
'மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்' என்று பெயர் சூட்ட வேண்டும்' - அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை
Published on

மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான நேற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

இந்நிலையில், காலை உணவுத் திட்டத்திற்கு "மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயர் சூட்ட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு எக்ஸ் பக்க பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த திட்டமான "முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை" இன்று ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவு படுத்தியுள்ளார்கள்.

இதன் மூலம் புதிதாக 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக 34,987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகிறார்கள்.

22 இலட்சம் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி, அவர்களின் பெற்றோர்களுக்கு மன நிறைவை தந்துள்ள தமிழ்நாட்டின் தாயுமானவர் மு.க.ஸ்டாலின் அவர்களை வணங்குகின்றோம்.

இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது.

சட்டமன்றத்தில் தெரிவித்ததை இங்கே மீண்டும் பதிவு செய்கின்றேன். இந்த மகத்தான திட்டத்திற்கு "மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயர் சூட்ட வேண்டும். கடல் தாண்டி உலகம் முழுக்க இத்திட்டம் பரவ வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com