

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் காணப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தினர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மானூரில் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் காணப்பட்டதாக நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் அறியப்பட்டது.
இத்தகவல் அறிந்தவுடன் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த நாளான 5-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை, தலைமை ஆசிரியர் உணவு பார்வையின்போது, பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த சின்டெக்ஸ் தொட்டியை பார்வையிட்டபோது, அதில் தண்ணீர் ஏதும் இல்லாத நிலையில் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் இருந்த நிலையில் அதனை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ததாக தெரிவித்தார்.
மாணவர்கள் குடிக்கும் குடிநீரானது வேறொரு இடத்தில் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் யாரும் சின்டெக்ஸ் தொட்டியில் இருந்த தண்ணீரை பயன்படுத்தவில்லை என விசாரணையில் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறை முலமாக விரிவாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.