‘இபிஎஸ் அளித்த பதவிகள் வேண்டாம்... சசிகலா, டிடிவி தினகரை கட்சியில் சேர்க்க வேண்டும்’ - எஸ்.பி.வேலுமணி பேட்டி

பறிக்கப்பட்ட பொறுப்புகளை வழங்கினால் மட்டுமே புதியப் பதவிகளை ஏற்போம்.
‘இபிஎஸ் அளித்த பதவிகள் வேண்டாம்... சசிகலா, டிடிவி தினகரை கட்சியில் சேர்க்க வேண்டும்’ - எஸ்.பி.வேலுமணி பேட்டி
Published on

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அதிமுகவில் மோதல் வெடித்தது. இபிஎஸ்மீதான அதிருப்தியில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர், விராலிமலை விஜயபாஸ்கர்கள் என முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஒரு அணியாக திரண்டனர்.

அப்போது இவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் இன்னும் மோதல் முற்ற சிவி சண்முகம் உள்ளிட்டப் பலரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் இபிஎஸ்.

பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைகள் எட்டப்பட்டு எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சிலர் சுமூகமாக சென்றனர். அவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கினார் இபிஎஸ். ஆனால் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவிமட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை.

வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதனால் அப்பொறுப்புகளை ஏற்கமாட்டோம் என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அறிவித்தனர்.

இதனிடையே விஜயபாஸ்கர்கள் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் இந்த உட்கட்சி பூசல் விவகாரமும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி மீண்டும் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்கவேண்டும் எனவும் இல்லையென்றால் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை ஏற்கமாட்டோம் என மீண்டும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,

“எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள். அதுபோல இபிஎஸ் முதலமைச்சர், பொதுச்செயலாளர் ஆவதற்கும் உழைத்தவர் சி.வி.சண்முகம். தொடர்ந்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை தொடரக்கூடாது. கட்சி பலப்படுத்தப்பட வேண்டும்.

சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சியில் இருந்து பிரிந்த அனைவரையும் மீண்டும் சேர்க்கவேண்டும். எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பழைய பொறுப்புகளை அளித்தால், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறோம்.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com