பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

முதலமைச்சர் விஜய் மொத்தம் 1,20,365 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
CM Vijay - Madras high court
Published on

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பெரம்பூர் தொகுதி

சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் விஜய் 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதலமைச்சர் விஜய் மொத்தம் 1,20,365 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66 ஆயிரத்து 650 வாக்கு பெற்றிருந்தார்.

முதலமைச்சர் விஜய்

பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கில், வேட்புமனுவில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும், சொத்து விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐகோர்ட் நோட்டீஸ்

இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என, ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com