

நீட் முறைகேடு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த 20-ந்தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.
இதையடுத்து மெரினா கடற்கரை பகுதியில் 2 துணை ஆணையர் தலைமையில் 300 காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மெரினா செல்லும் மக்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பீக் ஹவர்ஸில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் தவிர்த்து வேறு யாரும் செல்கிறார்களா? என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் மெரினாவிற்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.