

ஆவணி மாத முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடை பெற்றது.
திருப்போரூர், திருத்தணி, குன்றத்தூர் முருகன் கோவில்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஜோடிகளின் திருமணத்தால் கோவில் வளாகங்களில் கூட்டம் அலைமோதியது. இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் வருகையும் அதிகமாக இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காலை முதலே ஏராளமானோர் சென்றதால் பஸ், மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோவில் வளாகத்தில் இன்று 75 திருமணங்கள் நடந்தன. கோயிலையொட்டி பதிவு செய்யப்படாத திருமணங்களும் நடைபெற்றன. இதனால் திருமணத்துக்கு வருகை தந்த உறவினர்கள், நண்பர்கள் குவிந்ததால் கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் திருமணத்துக்கு வந்தவர்கள் பக்தர்கள் திணறினர். கோயில் வெளிப்புற வளாகம் முழுவதும் திருமணங்கள் நடைபெற்றதால் சுற்றி வரக் கூட முடியாத சூழ்நிலை நிலவியது.
இதேபோல், கோவில் மாடவீதியைச் சுற்றி உள்ள 15-க்கும் மேற்பட்ட மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெற்றது. போலீசார் காலை முதல் மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் கோயில் வாகன நிறுத்தும் இடங்களுக்கு அனுப்பியதால் மாட வீதிகளில் ஓரளவு நெரிசல் குறைந்து காணப்பட்டது.
திருத்தணி முருகன் கோவிலில் இன்று 75-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. மணமக்களின் உறவினர்கள் மற்றும் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர் கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.
அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வீதியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். மேலும் திருத்தணி நகரம் முழுவதும் உள்ள தனியார் திருமண மண்டபங்களிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றதால் மலைப்பாதை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மட்டும் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசலாகக் காணப்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுகுறித்து திருமணத்திற்கு வந்தவர்கள் கூறும்போது, கோவில் நிர்வாகம் சார்பில் போதிய ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோவிலில் திருமணம் முடிந்த புதுமண ஜோடிகள் கூட்ட நெரிசல் காரணமாக வெளியே செல்லவே திணறினர் என்றனர்.