

சென்னையில் நடந்த கலைஞரின் 103வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு கவிப்பேரரசு வைரமுத்து உரையாற்றினார்.
இதன்போது நடந்து முடிந்த தேர்தல் மற்றும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி குறித்து வைரமுத்து சிலவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் பேசியதாவது, " இந்த தேர்தலில் எனது ஆதங்கங்த்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். திமுக தோற்றிருந்தாலும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தோற்றிருக்கக்கூடாது. நிலா தேயலாம், வானம் தேய்ந்து விடக்கூடாது. இதுதான் என்னுடைய ஆதங்கம்.
கொளத்தூர் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியா அல்லது சிங்கப்பூரின் ஒரு பகுதியாக என கேட்கும் அளவுக்கு உயர்த்தியவர் மு.க.ஸ்டாலின்.
இருப்பினும் தோல்விக்கு யாரையும் குறை சொல்லாதீர்கள். தோல்வியின் முழு பொறுப்பையும் நான் ஒருவன் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன் என அவர் சொன்னது என் இதயத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.
மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார் என்றால் தமிழர்களின் நன்றி உணர்வின் மீது நமக்கெல்லாம் சந்தேகம் வருகிறது. அந்த தோல்வியெல்லாம் ஒரு தோல்வியல்ல.
மே 4ம் தேதி ஒரு நாள் மட்டும் தான் மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் கொளத்தூர் தொகுதி மக்கள் 365 நாட்களும் தோற்கடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
நான் ஸ்டாலினுக்கு வருந்துவதை விட அந்த தொகுதி மக்களுக்காக அதிகம் வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த விழாவில் பங்கேற்று பேசியது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தோல்வியில் வழி காண்கிறவன் மேதை; பழி போடுகிறவன் கோழை. இயக்கங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் தோல்வி என்பது ஆசான்.
தோல்வி என்பது சோர்வதற்கல்ல; ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல. தோல்வியைத் தூர நிறுத்திவிட்டு
மக்களைப் பக்கத்தில். அழைத்துக்கொள்வார் கலைஞர்
அதையே பின்பற்றுங்கள் வெற்றி என்பது பெற்றுக்கொள்ள; தோல்வி என்பது கற்றுக்கொள்ள” என குறிப்பிட்டுள்ளார்.