கள்ளக்காதலில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததால் பெண்ணை தீர்த்துக் கட்டினோம்- வடமாநில தம்பதி வாக்குமூலம்

கொலை தொடர்பாக எதுவும் வெளியில் தெரியாது, தப்பித்துக் கொள்ளலாம் என்றே நினைத்து இருந்தோம்.
கள்ளக்காதலில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததால் பெண்ணை தீர்த்துக் கட்டினோம்- வடமாநில தம்பதி வாக்குமூலம்
Published on

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் ஆக்ராவில் மீட்கப்பட்டது.

இதை தொடர்ந்து அங்குள்ள போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் ஒடிசாவை சேர்ந்த ஹயாத் நிஷா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கூடுவாஞ்சேரி

கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஹயாத் நிஷாவை, ராகுல் என்கிற மொனிருதின் லஸ்கர் அவரது மனைவி பகவதி மாஜி ஆகிய இருவரும் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.

பின்னர் ஹயாத் நிஷாவின் உடல் சதை பகுதியை பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டாவில் போட்டு அதனை சமைத்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பெண்ணை கொன்று இருவரும் நரமாமிசம் சாப்பிட்டார்களா? என்கிற திகிலூட்டும் கேள்வியும் எழுந்தது.

கைது

இதை தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிப்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக இருவரும் நேற்று சிக்கினர். அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சென்று நடத்தப்பட்ட விசாரணையில் மணிப்பூரில் பதுங்கியிருந்த ராகுல் கைது செய்யப்பட்டார்.

அதைதொடர்ந்து ஒடிசாவில் வைத்து பகவதி மாஜியையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னைக்கு

இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்த உள்ளனர். போலீசில் சிக்கியதும் கொலைக்கான காரணம் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது கள்ளக்காதலில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததால் தீர்த்து கட்டியதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். ராகுல் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

தகாத உறவு

நான் எனது மனைவி பகவதிமாஜியுடன் கூடுவாஞ்சேரியில் வசித்து வந்தேன். அப்போது ஹயாத் நிஷாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து சென்றார். இருவரும் நெருங்கி பழகியது எனது மனைவி பகவதி மாஜிக்கு பிடிக்கவில்லை. அவர் என்னையும், ஹயாத் நிஷாவையும் கண்டித்தார். இதனால் நான் ஹயாத் நிஷாவுடனான தொடர்பை துண்டித்து விட முடிவு செய்தேன். இதுபற்றி அவரிடம் நேரடியாகவே தெரிவித்தேன். அதற்கு ஒத்துக்கொள்ளாத ஹயாத் நிஷா எங்களை மிரட்டினார்.

இது இருவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் ஹயாத் நிஷாவை கொலை செய்ய திட்டமிட்டோம்.

வெளியில் தெரியாது

சம்பவத்தன்று எங்களது வீட்டில் வைத்து ஹயாத் நிஷாவுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது கடுமையான வார்த்தைகளால் அவர் திட்டியதால் ஆத்திரத்தில் துண்டு துண்டாக வெட்டி கொன்றோம்.

கொலையை மறைப்பதற்காக சூட்கேசில் உடலை வைத்து ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தோம். இந்த கொலை தொடர்பாக எதுவும் வெளியில் தெரியாது, தப்பித்துக் கொள்ளலாம் என்றே நினைத்து இருந்தோம்.

இவ்வாறு கைதான ராகுல் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com