மழை பெய்ய வேண்டி தவளைகளுக்கு திருமணம்- கிராம மக்கள் திரண்டு வழிபாடு

தவளைகள் திருமண விழாவின்போது ஊர் மக்கள் சார்பில் மதுரை வீரன் சுவாமிக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மழை பெய்ய வேண்டி தவளைகளுக்கு திருமணம்- கிராம மக்கள்  திரண்டு வழிபாடு
Published on: 
Summary

தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து இறைவனை வேண்டினால் நிச்சயம் மழை பொழியும் என்ற நம்பிக்கையில், இந்த பாரம்பரிய வழிபாட்டை தொடர்ந்து நடத்தி வருவதாக ஊர்ப்பெரியவர்கள் தெரிவித்தனர்.

கோவை வேடபட்டி அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் மழை குறைந்து விவசாயம் மற்றும் குடிநீர் சேவைகள் பாதிக்கப்படும்போது, முன்னோர் கடைப்பிடித்த வழிமுறையை பின்பற்றி பொதுமக்கள் வினோத சடங்குகளை நடத்துவது வழக்கம்.

தவளைகளுக்கு திருமணம்

இதன் ஒருபகுதியாக குரும்பபாளையம் கிராமத்தில் மழை பெய்ய வேண்டி தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது என்று கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி புரட்டாசி மாதத்தில் குறிப்பிட்ட ஒரு நாளை தேர்வு செய்து ஆண்-பெண் தவளை ஜோடிக்கு திருமணம் நடத்தப்பட்டது. இதற்காக அந்த ஊர் மக்கள் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என்று இரு தரப்பாக பிரிந்து செயல்பட்டனர்.

சிறப்பு வழிபாடுகள்

திருமண சடங்கையொட்டி தவளைகளுக்காக சிறிய மாட்டு வண்டி அலங்கரிக்கப்பட்டு, அதில் ஆண்-பெண் தவளைகள் தனித்தனியாக வைக்கப்பட்டு பொதுமக்கள் குடை பிடித்து வர பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. மேலும் திருமணத்திற்கு தேவையான அனைத்து சீர்வரிசை பொருட்களும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

தொடர்ந்து அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து தவளைகளுக்கு முறைப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்பிறகு திருமணம் செய்து வைக்கப்பட்ட தவளைகள் கிணற்றில் விடப்பட்டன.

கிடா வெட்டி விருந்து

தவளைகள் திருமண விழாவின்போது ஊர் மக்கள் சார்பில் மதுரை வீரன் சுவாமிக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னோர்களின் பாரம்பரிய நம்பிக்கை

தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து இறைவனை வேண்டினால் நிச்சயம் மழை பொழியும் என்ற நம்பிக்கையில், இந்த பாரம்பரிய வழிபாட்டை தொடர்ந்து நடத்தி வருவதாக ஊர்ப்பெரியவர்கள் தெரிவித்தனர். வேடபட்டி குரும்பபாளையம் கிராமத்தில் முன்னோர்களின் பாரம்பரிய நம்பிக்கையை பின்பற்றி நடைபெற்ற இந்த வினோத திருமண விழா, சுற்றுவட்டார கிராமத்தினரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com