2 இலவச கியாஸ் சிலிண்டர் நிறுத்தம்: கோவை ஆட்சியரிடம் மனு அளித்த ‘ரூ.1 இட்லி’ கமலாத்தாள் பாட்டி

ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
Kamalathal Patti
Published on
Summary

சமூக வலைத்தளங்களில் வைரலான கமலாத்தாள் பாட்டியின் இந்த நியாயமான கோரிக்கை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதான கே.கமலாத்தாள் பாட்டி, கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெறும் 1 ரூபாய்க்கு சுடச்சுட இட்லி விற்பனை செய்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.

இவரது சேவையைப் பாராட்டி பல்வேறு முன்னணி நிறுவனங்களும் அரசு அதிகாரிகளும் உதவி வழங்கி வந்தனர். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தமக்கு மாதம் 2 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக கமலாத்தாள் பாட்டி தெரிவித்துள்ளார். அதன்பின்னர் இலவச சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஏழைகளுக்கு தொடர்ந்து 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் நிலையில், கியாஸ் சிலிண்டர் செலவை தம்மால் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், நிறுத்தப்பட்ட இலவச கேஸ் சிலிண்டர்களை மீண்டும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலான கமலாத்தாள் பாட்டியின் இந்த நியாயமான கோரிக்கை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com