திருத்தணி கோவிலில் கோபுர சிலை உடைந்து விழுந்ததில் 4 பக்தர்கள் படுகாயம்

பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் திருத்தணி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
திருத்தணி கோவிலில் கோபுர சிலை உடைந்து விழுந்ததில் 4 பக்தர்கள் படுகாயம்
Published on: 
Summary

திருத்தணி கோவிலில் தரிசனத்திற்கு வந்தபோது கோபுர சிலை உடைந்து பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி முருகன்கோவில் அறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக உள்ளது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் திருத்தணி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

சிலை உடைந்தது

இந்த நிலையில் இன்று காலை கோவிலில் உள்ள இலவச தரிசன வரிசையில் வழக்கம்போல் பக்தர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது இலவச தரிசன நுழைவுவாயில் பகுதியில் உள்ள சிறிய கோபுரத்தில் இருந்த 2 சிலைகள் திடீரென உடைந்து பக்தர்கள் மீது விழுந்தது. இதில் தர்மபுரியை சேர்ந்த லட்சுமி (60), ஜெயா (65), திருப்பதியை சேர்ந்த மணிகண்டன்(25), சரிதா (40) ஆகிய 4 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் மணி கண்டனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

பக்தர்கள் அதிர்ச்சி

இதனை கண்டு கோவிலில் இருந்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் 4 பேரையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீரமைப்பு

இலவச தரிசன நுழைவு வாயில் பகுதியில் உள்ள இந்த சிறிய கோபுரம் மிகவும் பழமையானது. இதில் இருந்த சுமார் 2 அடி உயரமுள்ள சிலை உடைந்து விழுந்ததாக தெரிகிறது. இதனை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருத்தணி கோவிலில் ஏற்கனவே குரங்குகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த குரங்குகள் அங்கு உள்ள கோபுரங்கள் மீது கும்பலாக சுற்றி வருகின்றன.

குரங்குகள்

எனவே சேதம் அடைந்து இருந்த சிலைகள் மீது குரங்குள் பிடித்து ஏறும் போது உடைந்து இருக்கலாம் என்று தெரிகிறது. மீண்டும் இது போல் சம்பவம் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருத்தணி கோவிலில் தரிசனத்திற்கு வந்தபோது கோபுர சிலை உடைந்து பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com