

பத்து வருடங்களுக்கு முன்பு தாளவாடியில் சிறுத்தை ஒன்று ஒரு மனிதரை கொன்றது அதன் பிறகு பத்து வருடங்களாக எந்த ஒரு சம்பவம் நடைபெறாத நிலையில் தற்போது சிறுத்தை மனிதரை கொன்று உள்ளதால் பங்களா தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் அருகே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் பங்களாதொட்டி என்ற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பது முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் பங்களா தொட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் வேலை விஷயமாக ஆசனூர் வந்து அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஆசனூருக்கு அடர்ந்த வனப் பகுதியில் உள்ள குறுக்கு வழியில் செல்வது வழக்கம் .
இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (33) கூலி வேலை பார்த்து வந்தார்.
நேற்று முத்தினம் இரவு பெரியசாமி கூலி வேலைக்கு சென்று விட்டு ஆசனூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு உணவை பார்சலில் வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை பெரியசாமி மீது திடீரென பாய்ந்தது. இதனால் நிலைகுலைந்த பெரியசாமி கீழே விழுந்தார். அவரை சிறுத்தை புதருக்குள் இழுத்துச் சென்றது. இரவு முழுவதும் சிறுத்தை பெரியசாமி உடலை கடித்துக் குதறி சிதைத்தது.
பின்னர் நேற்று காலை பங்களா தொட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் பெரியசாமி உடல் சிதைந்து கிடந்தது. இதனால் பங்களா தொட்டி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் பெரியசாமி உடலை எடுக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் பொதுமக்கள் இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பெரியசாமி குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு பெரியசாமி உடல் கொண்டு செல்லப்பட்டது.
எனினும் பங்களா தொட்டி கிராம மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு தாளவாடியில் சிறுத்தை ஒன்று ஒரு மனிதரை கொன்றது அதன் பிறகு பத்து வருடங்களாக எந்த ஒரு சம்பவம் நடைபெறாத நிலையில் தற்போது சிறுத்தை மனிதரை கொன்று உள்ளதால் பங்களா தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் பயத்தை போக்கும் வகையில் வனத்துறையினர் பங்களா தொட்டி ஆசனூர் வழியாக செல்லும் பகுதியில் நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளனர் இதன் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க முடியும் என்றனர். இதைப்போல் டிரோன் பயன்படுத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர்.
மேலும் வனத்துறையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து நேற்று இரவு முழுவதும் ஆசனூர் பங்களா தொட்டி வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க உயர் அதிகாரிகளிடம் அனுமதி கூறியுள்ளனர். அனுமதி கிடைத்ததும் கூண்டு வைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் எந்தெந்த இடங்களில் கூண்டு வைக்கலாம் என இடங்களை தேர்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.