

சென்னை யானைக்கவுனி ஏலக்கந்தப்பன் தெரு, பொன்னப்பா சந்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கிணற்றில் தூர்வாரும் பணி இன்று காலையில் நடந்தது.
சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடத்தைச் சேர்ந்த அய்யனார் (35), அவரது தந்தை ரவி (65) ஆகியோர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
3½ அடி அகலம், 45 அடி ஆழம் உள்ள கிணற்றில் முதலில் அய்யனார் இறங்கினார். அவர் உள்ளே சென்று சிறிது நேரம் ஆகியும் எந்தவித சத்தமும் இல்லாததால் அவரது தந்தை ரவி கிணற்றில் இறங்கினார். இருவரும் கிணற்றில் இறங்கி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர் ராஜ்குமார் தலைமையில் 5 பேர் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டபோது அய்யனாரும், ரவியும் விஷவாயு தாக்கி கிணற்றில் பிணமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தீயணைப்புப் படை வீரர்கள் அவர்கள் இருவரின் உடலையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டுக் கிணற்றை தூர்வாரும்போது தந்தையும், மகனும் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து யானைக் கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.