

தொலைந்து போன சிம் கார்டுக்கு பதிலாக புதிய சிம்கார்டு பெற ஏர்டெல் நிறுவனத்தின் முகவர் அதிக கட்டணம் வசூல் செய்த புகாரை அடுத்து பாதிக்கப்பட்டவருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டில் வசிக்கும் சரிதா என்பவர் கடந்த 21.09.2025 அன்று தனது செல்போனை தவறவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 22.09.2025 அன்று செங்கல்பட்டில் உள்ள மணி மார்க்கெட்டிங் என்ற ஏர்டெல் நிறுவன ஷோரூமில் புதிய சிம்கார்டு கேட்டு வாய்மொழியாக விண்ணப்பித்துள்ளார். அப்போது தொலைந்து போன சிம் கார்டு அவரின் தந்தை காந்தி என்பவரின் பெயரில் இருப்பதாகவும், அதை மாற்றிக் கொடுக்க 650 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் தன்னுடைய கணவரின் வங்கிக்கணக்கில் இருந்து 650 ரூபாயை ஜிபே மூலம் செலுத்தியுள்ளார். புதிய சிம்கார்டு பெற அதிக கட்டணம் வசூல் செய்வதாக அப்போது அவர் முறையிட்டுள்ளார். ஆனால் அவருக்கு முறையான பதில் வழங்கப்படாமலும் அலட்சியமாகவும் அந்த ஷோரூமின் உரிமையாளர் பதில் கூறியுள்ளார். மேலும் ரசீதை தனக்கு வழங்குமாறு கேட்டுள்ளார். அதன் பின்பு 17 நாட்கள் அலைகழித்து கட்டணம் செலுத்தியதற்கான ரசீது அவருக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதிய சிம் கார்டு கட்டண விவரம் கேட்டு ஏர்டெல் நிறுவனத்திற்கு அவரின் கணவரும் வழக்கறிஞருமான ஜெயவேல் மெயில் அனுப்பியுள்ளார். டூப்ளிகெட் சிம் கார்டு பெற 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது எனவும் பெயர் மாற்றத்திற்கு எவ்வித கட்டணமும் கிடையாது எனவும் ஏர்டெல் நிறுவனம் அவருக்கு பதில் அளித்தது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் முகவரான மணி மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் மணிகண்டன் மீது சரிதா வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரணை செய்த செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் 27.08.2026 அன்று சரிதாவிற்கு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வாடிக்கையாளரிடம் அதிகப்படியாக வசூல் செய்யப்பட்ட ரூ.600 ரூபாயை 22.09.2025 அன்றைய தேதியிலிருந்து 24% வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும்.
வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது, சேவைக் குறைபாடு மற்றும் நேரமிழப்பை ஏற்படுத்தியதற்கு நிவாரணமாக ரூ.25,000, வழக்கு செலவிற்காக 15,000 என 40,000 ரூபாயை வாடிக்கையாளருக்கு அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் காசிபாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.