சென்னையில் அண்ணாமலை தலைமையில் நாளை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பேரணி நிறைவடைந்ததும் அண்ணாமலை உரையாற்றுகிறார். பேரணியில் பங்குபெறும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.
அண்ணாமலை
அண்ணாமலை
Published on

நாளை மாலை 3 மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை ஹால் அருகில் வீ த லீடர்ஸ் அமைப்பினரும், பொதுமக்களும் திரள்கிறார்கள். அங்கிருந்து அண்ணாமலை தலைமையில் பேரணி புறப்படுகிறது.

வீ த லீடர்ஸ் அமைப்பை அண்ணாமலை தொடங்கியது முதல் சமூக முன்னேற்றத்துக்கு தேவையான அடிப்டை காரணங்களை கண்டறிந்து அதுபற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். கடந்த மாதம் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள், மாரத்தான், இளைஞர்களை சந்தித்து உரையாடுதல் போன்றவற்றை நடத்தினார்கள்.

50 லட்சம் மரக்கன்றுகள்

இந்த மாதம் சுற்றுச்சூழல் மேம்பாடு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் வீ த லீடர்ஸ் அமைப்பினர் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, ஏரி, கால்வாய்கள் தூர் வாருதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். அதில் இந்த மாதம் மட்டும் சின்னக் கலைவாணர் மறைந்த விவேக் பெயரில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அந்த பணிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரி முதல் உவரி, குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி கடற்கரைகளை தூய்மை படுத்தும் பணிகளை அண்ணாமலை தொடங்கி வைத்தார். 3-ந்தேதி மதுரையில் வைகை ஆற்றை தூய்மை படுத்தும் பணிகளையும், மரக்கன்றுகள் நடுவதையும் தொடங்கி வைத்தார். சென்னையில் நாளை (16-ந்தேதி) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களை திரட்ட ஏற்பாடுகள் நடக்கிறது.

நாளை மாலை 3 மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை ஹால் அருகில் வீ த லீடர்ஸ் அமைப்பினரும், பொதுமக்களும் திரள்கிறார்கள். அங்கிருந்து அண்ணாமலை தலைமையில் பேரணி புறப்படுகிறது. பேரணிக்கு அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். இதில் நிர்வாகிகள் மாதவரம் எம்.மனோகரன், கிருஷ்ண மூர்த்தி, வெங்கடேஸ்வரா, லயன். பி.செல்லதுரை, எஸ்.தியாகராஜன், ஏ.செல்வ குமார், பி.மகாலிங்கம், ஏ.நிர்மல்ராஜ், கிஷோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் நடிகர் விவேக் மனைவி அருள் செல்வி விவேக், ஆங்கிலிட்டன் சர்ச் அருட்தந்தை சாமுவேல் குணசேகரன் ஆகியோரும் உடன் நடந்து செல்கிறார்கள்.

ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பேரணி நிறைவடைந்ததும் அண்ணாமலை உரையாற்றுகிறார். பேரணியில் பங்குபெறும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.

பேரணியில், மரங்களை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பது, நீர்நிலைகளைப் பாதுகாத்தல், பசுமையான தமிழகத்தை உருவாக்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவது ஆகியவை குறித்து வலியுறுத்தப்படுகிறது.

நம் மண், நம் நீர், நம் காற்று இவை அனைத்தும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாத்து வழங்க வேண்டிய பொக்கிஷங்கள். நம் தலைமுறையையும், வருங்கால தலை முறையையும் பாதுகாக்க வேண்டியது மிக முக்கிய பொறுப்பு ஆகும். எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று முகப்பேர் வெங்கடேஸ்வரா லயன் பி.செல்லத்துரை, எஸ்.தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறி உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com