

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு தொடங்கியது.
மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர்.
அந்த வகையில் முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்கு தே.மு.தி.க. ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியதாவது:-
சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை காவிரி நீர், முல்லை பெரியாறு, மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வே இல்லை.
சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்து காவிரிப் பிரச்சனை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு எப்போது மாறப்போகிறது?.
காவிரிக்காக ஜெயலலிதா, கலைஞர், மு.க.ஸ்டாலின் என அனைவரும் போராடியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்வர் சிவக்குமாருடன் மேகதாது விவகாரம் குறித்து பேச வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ளார். அதனால் அவருடன் தமிழக முதலமைச்சர் பேச வேண்டும்.
மழை காலம் தொடங்குவதற்கு முன்னரே நீர்நிலைகளை தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திடுக.
தன்னிறைவு மிக்க மாநிலமாக நம் தமிழகத்தை உருவாக்க மாநில நதிகளை முதலில் இணைப்போம்.
மின்மிகை நீர் மேலாண்மையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும்.
தமிழ்நாடு நீர் மிகை மாநிலமாக மாற வேண்டும், அதற்காக ஆறுகளை இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் எம்எல்ஏ செல்லசுவாமி கூறுகையில்," விவசாயிகள் நலனுக்காக முதல் கூட்டத்தொடரிலேயே தீர்மானத்தை முன்மொழிந்ததற்கு வரவேற்பு" என்றார்.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் கூறினார்.
மேலும் அவர், "மேகதாதுவில் அணை கட்ட வரைவு திட்ட அறிக்கை தயாராகிறது எனவும் மேகதாது அணை கட்ட பூமி பூஜை நடத்தப்படும் என்கிறார் கர்நாடக முதல்வர் சிவக்குமார்.
40 ஆண்டுகளாக திமுக, அதிமுக எண்ணற்ற சட்ட போராட்டம் நடத்தி காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டியுள்ளது" என்றார்.